ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று(13) நள்ளிரவிற்கு முன்னர், இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தமக்கு தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் கூறினார்.
இந்த விடயம் குறித்து, சபாநாயகரிடம் இன்று(14) மீண்டும் வினவியமைக்கு, இந்த தருணத்தில் தாம் மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகவும் விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் கூறினார்.
தற்போது பதில் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியை விட்டுச் சென்றதாகக் கருதி மேற்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதுவரை ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காத காரணத்தினால், நாளைய தினம்(15) பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கப்பூருக்கு சென்றதன் பின்னர் ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை நேற்று(13) தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும், ஜனாதிபதி இன்னமும் மாலைதீவுகளில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.