“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள வலையில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கக்கூடாது. தமிழ், முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆணைக்கு அவர்கள் துரோகம் செய்யக்கூடாது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைக்குச் சர்வகட்சி வேலைத்திட்டமோ அல்லது சர்வகட்சி அரசோ தீர்வு அல்ல. இது காலத்தை வீணடிக்கும் செயலாகும்.
பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண நிறைய வழிகள் உண்டு. அந்த வழிகளை அரசு நாட வேண்டும். இதைச் செய்ய ரணில் அரசுக்கு இயலாதெனில் ஆட்சியை எதிரணியினராகிய எம்மிடம் கையளிக்க வேண்டும். எதிரணியிலுள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையில் உருவாகும் சர்வகட்சி அரசில் இணையக்கூடாது.
தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வகட்சி அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறத் தயாராகவுள்ளனர் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ள கருத்து மிகவும் ஆழமான விடயம்” – என்றார்.