தீராத குடிநீர் பிரச்சினை! வீதிக்கு வந்த மக்கள்.

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கல்லுண்டாய் வெளி – குடியிருப்பு மக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் கல்லுண்டாய் பகுதி வீதியினை மறித்து, வீதியின் குறுக்கே பொதுமக்களும் மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், போராட்ட இடத்திற்கு விரைந்த மானிப்பாய் காவல்துறையினர் வீதியை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்த மக்களை அகற்றி போக்குவரத்தினை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்த மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வரவழைத்திந்திருந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக பெற்றுத் தருவதாக தெரிவித்தோடு குடியிருப்பு பகுதிக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டதனை அடுத்து போராட்டம் நிறைவு பெற்றது.

Spread the love