யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் இயற்கை உரத்தினால் பயிரிடப்பட்ட புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் 25,000 கிலோகிராம் வீதம் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சின் கீழுள்ள விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ், நாட்டில் புளிப்பு வாழை ஏற்றுமதி வலயங்களை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 18 தடவைகள் ராஜாங்கனை புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 350 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் புளிப்பு வாழைப்பழங்கள் இம்மாதம் 28ஆம் திகதி ஏற்றுமதி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளிப்பு வாழை செய்கையில் ஈடுபட்டுள்ளதுடன், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கை விரிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும், இந்த வருடம் எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதிகளில் புளிப்பு வாழை ஏற்றுமதி வலயமொன்றை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், செவனகல பிரதேசத்தில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையத்தை அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது ராஜாங்கனையில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலும் பதப்படுத்தும் நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ராஜாங்கனை புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு ஒரு தடவைக்கு 20,000 டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கின்றது. யாழ்ப்பாணத்தின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வாரந்தோறும் 40,000 டொலர்கள் நாட்டுக்கு கிடைக்க உள்ளன.
யாழ்ப்பாணத்தில் புளிப்பு வாழைப்பயிர்ச் செய்கையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு இயற்கை உரங்களையே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். எனவே, எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் புளிப்பு வாழைப்பழங்களுக்கு அதிக கேள்வி கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.