தொலைநோக்குடைய தலைவர் இலங்கைக்கு கிடைக்கவில்லை- எரிக் சொல்ஹெய்ம்

தொலை நோக்குடன்கூடிய தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய தலைவர்கள் இலங்கைக்கு கிடைக்கவில்லை என  இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் வழங்கிய செவ்வியில் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள் – அர்த்த பூர்வமான மாற்றங்களிற்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்குங்கள். பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்சினைக்கு கூட்டுத்தீர்வுகளை காண்பதற்கு சிங்கள முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புகளை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள் என்பதே இந்த தருணத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலிற்கான தனது ஆலோசனை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி – இலங்கை விவகாரத்தை உன்னிப்பாக அவதானிப்பவர் என்ற அடிப்படையில் ராஜபக்ஷ பரம்பரையின் எதிர்பாராத வீழ்ச்சி குறித்த உங்கள் கருத்து என்ன ?

பதில் – ராஜபக்ஷாக்களின் வீழ்ச்சியின் வேகம் பல அவதானிகளிற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவர்கள் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்று மூன்று வருடங்களே ஆகின்றன. அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும் பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம்.


கேள்வி – யுத்தத்திற்கு பிந்திய இலங்கை முடிவற்ற விதத்தில் நிச்சயமற்றதாக, ஸ்திரமற்றதாக காணப்படுகின்றது. 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் இலங்கையில் ஜனநாயக கட்டமைப்புகள் மீண்டும் வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனினும் 2019இல் ராஜபக்ஷாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தவுடன் அது முழுமையாக தோல்வியடைந்தது. நாடு தற்போது மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இலங்கை ஏன் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் நோயுற்றதாக காணப்படுகின்றது?

பதில் – பல தசாப்தகால நெருக்கடிகளிற்கு பின்னரும் சிங்கள பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் கொள்கையில் சிறுபான்மை தமிழர்கள். முஸ்லிம்களிற்கான சுயாட்சி என்ற விடயத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை . அனைத்து மக்களிற்கும் ஏற்ற விதத்தில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் என இலங்கை பிடிவாதம் பிடிக்கின்றது.

இதற்கப்பால் சிங்கப்பூரின் லீ குவான் யூ அல்லது இந்தியாவின் நரேந்திரமோடி போன்றவர்கள் வழங்கிய தொலை நோக்குடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தலைவர்கள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. ஸ்திரமான அபிவிருத்தியடையும் பொருளாதாரம் அனைவருக்கும் நன்மையளிக்கும் என்றார்.

கேள்வி – ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆளும் அரசியலில் நுழைந்துள்ளார், இதனை எப்படி பார்க்கின்றீர்கள் – சமாதான அனுசரணையாளர் என்ற அடிப்படையில் நீங்கள் அவருடன் நெருங்கி பணியாற்றினீர்கள் – விமர்சனங்களிற்கு அப்பால் தற்போதைய நெருக்கடியை கையாளக்கூடியவர் அவர் தான் என சிலர் கருதுகின்றனர்-பொருளாதார நிலையை ரணில் விக்கிரமசிங்கவினால் திறமையான விதத்தில் கையாள முடியும் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்-மிகவும் நெருக்கடியான தருணத்தில் எனது நண்பர் ரணிலிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன், ரணிலை விட தற்போதைய பொருளாதாரத்தை சிறப்பாக புரிந்துகொள்ளக்கூடிய – பேச்சுவார்த்தைகளில் சிறப்பாக ஈடுபடக்கூடிய வேறு ஒரு தற்போதைய இலங்கை தலைவரை நினைத்துப்பார்ப்பது கடினம். இதற்கு அப்பால் ரணில் ஒரு சிறந்த பண்பார்ந்த மனிதர்.

ஆனால் ராஜபக்சாக்களை வீழ்த்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர் இன்னமும் நீண்டதூரம் செல்லவேண்டும். இலங்கையின் இளைஞர்களின் கரிசனைகளை செவிமடுப்பதற்கும், நீண்ட கால தீர்வுகளிற்கு அவர்களின் பலத்தை உள்வாங்குவதற்கும் அவர்களை நோக்கி ரணில் விக்கிரமசிங்க தனது நேசக்கரத்தை நீட்டவேண்டும்.

கேள்வி– தற்போதைய தருணத்தில் தமிழ் தேசியவாத அரசியலிற்கான உங்கள் ஆலோசனை என்ன? இந்த நெருக்கடிகள் காரணமாக இலங்கை அரசியலில் ஆழமான மாற்றங்கள் ஏற்படும் என கருதுகின்றீர்களா?

பதில்– அமைதியான வழிமுறைகைளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள் -அர்த்தபூர்வமான மாற்றங்களிற்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்குங்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்சினைக்கு கூட்டுத்தீர்வுகளை காண்பதற்கு சிங்கள முஸ்லீம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புகளை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள்.

Spread the love