நவம்பரில் இலங்கையின் கடன் வழங்குனர்களுடன் மற்றொரு கலந்துரையாடல்

இலங்கையின் கடன் வழங்குனர்கள் தொடர்பான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, வெளிச்செல்லும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி டுபாகஸ் பெரிதானுசெத்யவான் மற்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான் ஆகியோரைச் சந்தித்தார்.

மூன்று பேர் கொண்ட சர்வதேச நாணய நிதியக் குழு, சாகல ரத்நாயக்கவைச் சந்தித்து, முன் நடவடிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டது.

இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விளக்கமளித்து அதற்கான பதிலைத் தெரிவிப்பதாக சர்வதேச நாணய நிதியக் குழுவுக்கு ரத்நாயக்க உறுதியளித்ததாகக் கூறினார். ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

Spread the love