Artemis I எனும் அதிசக்திவாய்ந்த ஏவுகணையை நாசா விண்ணில் ஏவியுள்ளது. எரிபொருள் கசிவு காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாக Artemis I விண்ணில் ஏவப்பட்டது.
நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக்கலம் அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை (16) செயற்படுத்தியது. Artemis I என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வுத் திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக்கலம் ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஏவுகணை மூலம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், Artemis I ஏவுகணையை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய, சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களைப் போன்ற பொம்மைகள் ஏவுகணை மூலம் அனுப்பப்படுகிறது. விண்ணில் உள்ள கதிர்வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவிற்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.