சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு இன்று நினைவு கூரப்படுகின்றது. நாடெங்கிலும் இந்த நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 18வது ஆண்டினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு, திருச்செந்தூரில் சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதேவேளை, சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.
உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட பொது நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.-10 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு உறவினர்களால் மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.
கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர். ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர்.