நாட்டின் பொருளாதார நெருக்கடி: உடல் உறுப்புகளை விற்கும் நிலை-சஜித் பிரேமதாஸ

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டை சீரழித்த, வக்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்பினர் திருட்டு யானையுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்கப்போவதாக கூறுவதாகவும், இதன் ஊடாக அவர்கள் மீண்டும் எழ முயற்சிப்தாகவும், இது பெரும் நகைச்சுவை எனவும், இதற்கு மக்கள் இடமளிப்பீர்களா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக பெற்றோர் தமது முழுமாத சம்பளத்தையும் செலவழிக்க நேரிட்டுள்ளதாகவும், மருத்துவ தேவைகளுக்காக கூடிய தொகை செலவாகுவதாகவும் அவர் தெரிவித்தார். மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேரணியூடாக கொழும்புக்கு வந்து பேராட வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் போது ஜனாதிபதி நாட்டை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எமது தாய் நாட்டை மொட்டு விற்பனை நிலையமாக மாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று முன்தினம் (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதி அமைப்பாளர் அஜித் செனவிரத்ன அவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிரத்தியேக பணியாளர் குழாமின் பிரதானியுமாக செயப்பட்ட W.N.P.விஜயகோன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love