நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 ஆகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு மற்றுமொரு தீர்வாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த பொது மற்றும் தனியார் துறை கூட்டு திட்டங்கள் இனங்காணப்பட்டு அந்த திட்டங்களின் மதிப்பு சுமார் 1950 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 12000 முதல் 15000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் 2700 நடுத்தர வர்க்க வீட்டுத் தொகுதிகளும் கொழும்பு, கம்பஹா களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 908 ஏக்கர் நிலப் பரப்பில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கொள்கலன் நிலையங்கள் மற்றும் கைத்தொழில் காலனிகளும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களில் 07 பல மாடிகளைக் கொண்ட பொது வாகன நிறுத்துமிடங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள வரலாற்று பெறுமதி மிக்க கட்டிடங்களை பாதுகாத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா விடுதிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சி நிலையங்களை அமைக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் ரூபவ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணி மற்றும் கட்டிடங்களில் பாரிய அளவிலான அலுவலக வளாகங்கள், மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலைகள், உயர் கல்வி நிறுவனங்கள், சுற்றுலா விடுதிகள், கலப்பு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் என்பன பொதுமக்களின் பங்களிப்பின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. தனியார் துறையினரும் உரிய முதலீட்டாளர்களை விரைவில் கண்டறியும் விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறும் இங்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் அந்த முதலீடுகளை ஈர்க்க மிகக் குறுகிய காலத்தில் கொள்முதல் செயல்முறையில் அதனை பூர்த்தி செய்யுமாறும பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வர்க்க வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு டொலர் மூலம் வீடுகள் கொள்வனவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதுடன், கொள்வனவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரசபைக்கு சொந்தமான இதுவரை பயன்படுத்தப்படாத காணி மற்றும் கட்டிடங்களில் அரச மற்றும் தனியார் துறை கூட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இந்நாட்டின் டொலர் நெருக்கடியை தீர்க்கும் நோக்கில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் மற்றுமொரு பாரிய செயற்திட்டமாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.