நாவலப்பிட்டி கூட்டத்துக்கு வந்த  மகிந்தவுக்கு கடும் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற நிலையில், அவர்களின் வருகைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினாலும் போராட்டம் முன்னெ டுக்கப்பட்டமையால் இருதரப்பினரி டையே பெரும் பதற்றம் நிலவியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு  செய்யப்பட்ட ஒன்றாக எழுந்து நிற்போம் எனும் தலைப்பிலான பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டியில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத் கமகேயின் ஏற்பாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபச தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், எவ்வித எதிர்ப்புகளும் இல்லாது நகருக்குள் பிரவேசிப்பதற்கான ஏற்பாடுகளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்குமாறு வலியுறுத்தியும் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுனவினரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிராகஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பெரும் போராட்டமொன்று நாவலப்பிட்டியில் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாவலப்பிட்டி கொத்மலை வீதியினை மறித்து அரசாங்கத்துக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் நகரில் பெரும் பதற்றம் நிலவியது. நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இருந்து நாவலப்பிட்டி நகருக்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் சென்ற போது, நாவலப்பிட்டி நகர மையத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு பொலிஸாரிடம் அனுமதி பெறவில்லை என நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் ஒலிபெருக்கியில் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நகருக்குள் நுழைவதை தடுப்பதற்காக நூற்றுக் கணக்கில் பொலிஸாரும் கலகத் தடுப்பு பொலிஸாரும் வீதியை மறித்து குவிக்கப்பட்டிருந்ததால் நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இவ்வேளையில், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்டவிரோதமான பொதுக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்போது, நாவலப்பிட்டி பொலிஸாரால் ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை நாவலப்பிட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதி கூட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் காரணமாக நாவலப்பிட்டிக்கு மேலதிக பொலிஸார் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவு வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

Spread the love