அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர, உபகரண அதிகார சபையின் ஊழியர்களுக்கான சம்பளம், நிலுவை சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் பங்களிப்பு தொகையை செலுத்துவதற்காக பேலியகொடையில் உள்ள காணி ஒன்றை விற்பனை செய்ய அந்த திணைக்களம் தீர்மானித்துள்ளது.
10 பில்லியன் ரூபாவுக்கு காணியை விற்பனை செய்வதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி களுபான தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 17 ஏக்கர் காணி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய இயந்திரங்கள் மற்றும் உபகரண அதிகார சபையின் ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளமாக 7 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி இருந்தனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணிப்பு துறை பாரிய பின்னடைவுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதனால், கூட்டுத்தாபனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் வருமானம் கிடைப்பதில்லை எனவும் களுபான கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுப்பதற்கு போதுமான வருமானம் கிடக்காத காரணத்தில், இலங்கை தேசிய பொறியியல் கூட்டுத்தாபனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
மே மாத சம்பளத்தில் ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை ஓய்வுபெற தீர்மானித்துள்ள ஊழியர்களுக்கு மாத்திரம் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது எனவும் களுபான மேலும் தெரிவித்துள்ளார்