பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:1992 ஆம் ஆண்டில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் கிரிக்கெட் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. முக்கியமாக, உங்களின் பேராதரவு கிடைத்துள்ளது, என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
இன்று, மக்களுக்கு உதவக்கூடிய புதிய அத்தியாயத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். எனது இந்த புதிய திட்டத்திற்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். கங்குலியின் டுவிட்டர் பதிவையடுத்து, பிசிசிஐ பதவியில் இருந்து கங்குலி விலகப்போவதாக தகவல் பரவியது. அரசியலில் நுழைய திட்டமிட்டு இருப்பதாகவும், பாஜகவில் சேரலாம் என்றும் பேசப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார். பிசிசிஐ தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.