பிரதேசசபைகளை நகர சபைகளாக மாற்றுவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

செயற்பாட்டில் இருக்கும் 7 நகர சபைகளை, மாநகர சபைகளாக மாற்றவும் 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் தற்போது 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 276 பிரதேச சபைகளும் காணப்படுகின்றன.

அதற்கமைய 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படும் நிலையில், அந்தந்த காலப்பகுதிகளில் குறித்த பிரதேசங்களில் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள், மக்களின் தேவைப்பாடுகள் அதிகரிப்பு என்பவற்றை ஆராய்ந்து குழுவொன்றினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை கவனத்தில்கொண்டு, களுத்துறை, வவுனியா, புத்தளம், மன்னார், கேகாலை, அம்பாறை, திருகோணமலை ஆகிய நகர சபைகளை மாநகர சபைகளாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Spread the love