அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளதன் காரணமாக தமது வியாபார நிலையங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரபல வர்த்தகர்களை பாதுகாத்து, அரசாங்கம் திறைசேரியை நிரப்ப முயற்சிப்பதாக ஐக்கிய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டானியா எஸ் அபேசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வர்த்தகர்கள் என்ற ரீதியில் நாம் வேதனத்தை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உண்மையில் எங்களிடம் பணிபுரிபவர்களுக்கு நாம் எவ்வாறு வேதனம் வழங்குவது? இந்த நெருக்கடி நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ள வரிகளும், வட்டி வீதங்களே காரணங்களாகும்.
28 சதவீதமாக காணப்பட்ட வங்கி வட்டிவீதம் தற்போது 36 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், எவ்வாறு வியாபாரம் ஒன்றை முன்கொண்டு செல்வது. முதலில் வீழ்ந்துள்ள நாடுகள் அனைத்தும் வட்டிவீதங்களை குறைத்துள்ளன சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாதுகாக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றன. இன்றும் அரசாங்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான கட்டணங்களை ஒரு சதமேனும் குறைக்கின்றனரா? எனஅவர் கேள்வி எழுப்பியுள்ளார்.