பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி (Megi) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளி தாக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் கிழக்கு மற்றும் தென் பிராந்திய கரையோரங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெகி சூறாவளியினால் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாக பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 13,000-இற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.