புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு ஒரு வருடத்தில் தீர்வு!

புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்துள்ள வாக்குறுதியை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த முயற்சிக்கு முழுமையான பங்களிப்பை கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைக் கூறினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், 2016 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் அரசிய லமைப்பு பேரவை உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள் கலந்துரையாடல்கள் மக்கள் சந்திப்புகள் நடத்தப்பட்டு, மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று, விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் தொடர்ந்து முன்செல்ல ஜனாதிபதி ஆவன செய்யவேண்டும். வேலைத் திட்டங்களை வெகு விரைவில் முன்னெடுத்தால் ஒரு வருட காலத்திற்குள் புதிய அர சியலமைப்பைக் கொண்டு வரலாம். ஒரு வருடம் கூட தேவை இல்லை அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். 

புதிய அரசியலமைப்பினூடாக இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலைத் திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கும் போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசோடு முழுமையாக இணைந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார். 2016 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகள் வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது. அந்த வழிகாட்டக் குழுவிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்தோம் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான இரண்டு இடைக்கால அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசியலமைப்பு வரைவு கூட அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்து ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன் நின்ற சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் அறிக்கையில் அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்டவேண்டும் என்று சொல்லப்பட்டது எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள் கலந்துரையாடல்கள் மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து முன் செல்ல ஜனாதிபதி ஆவணம் செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை வெகு விரைவாக தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். ஒரு வருடம் கூட தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படவேண்டும். ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை கொடுப்போம் என ஜனாதிபதிக்கு உறுதியளிக்கிறோம் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Spread the love