புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சர்வதேசத்தின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம், புதிய ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்துள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பதிகாரி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவேண்டும் என அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் காலத்தில் இணைந்து செயலாற்ற எதிர்பார்ப்பதாக அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில், ஜனநாயகத்தை பாதுகாத்தல், பொறுப்புக்கூறல், பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறியுள்ளார்.
இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாத்து, அமைதி போராட்டங்களை நடத்துவதற்கான உரிமையை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவருடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தின் மூலம் இலங்கையில் ஸ்திரமான நிர்வாகம் உருவாகி, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தெரிவித்துள்ளது.