புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவுதான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று கூறியிருந்தார். இதனால், இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நம்பிக்கை உருவாகியிருந்தது.
இந்நிலையில், தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியன உறுதிசெய்துள்ளன. வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து ஜப்பான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பரப்பில் விழுந்ததாக ஜப்பானின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.