தமிழ்த் தேசியக் கூட்டமையின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு நேற்று வியாழக்கிழமை இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சணக்கியன் கருத்துத் தெரிவிக்கையில். இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வீதிகளில் போராடும்போது, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்ற தடை உத்தரவினை எடுத்திருக்கின்றார். இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா? என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி. இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை . அவ்வாறு நடக்கும்போது, களுவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவினை பெற்றுக் கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இன்றுவரை போராட்டங்களை செய்யவேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இந்தத் தடை உத்தரவு கிடைத்ததற்குப் பின்னர் போராட்டம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தினை தருகின்றது. கோட்டா கோ கோம் என்ற விடயம் நடைபெறும் வரை, அதாவது கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்லும் வரை இந்தப் போராட்டங்கள் தொடர வேண்டும். அதிலே என்னுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் என அவர் தெரிவித்தார்.