மலையக பிரதேசங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை தெடர்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி, பவ்வாகம, சேலம் பிரிட்ஜ், ஓவிட்ட, அயன்போட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரதான வீதிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாவலப்பிட்டி பகுதியில் உள்ள மகாவெலி பவ்வாகம ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும், தங்க வைக்கப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் கன மழையினால் மூவர் உயிரிழந்துள்ளனர் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீதிகளில் விழுந்தமையால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.
அம்பகமுவ, பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 61 வயதுடைய பெண் உட்பட 05 வயது முன்பள்ளிச் சிறுமியுடன் மூவர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவினால் ஹற்றன், கொழும்பு வீதியில் கினிகத்தேன தியகல பகுதியிலும் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை தியகல பகுதியிலிருந்து கொத்மலை ஊடாக கம்பளை வீதி, மொரப்பே கோவிலுக்கு அண்மித்த பகுதியும் மூடப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் வட்டவளை பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்த இடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெறுகிறது..
நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகியுள்ள அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வெகுவாக அதிகரித்துவருகின்றது.
நோட்டன்பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழைகாரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளது.. நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால் மலைகளுக்கு மண் மேடுகளுக்கும் சமீபமாகவும் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களில் வாழ்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவலை, வட்டவளை, ஹற்றன், குடாகம, கொட்டகலை,சென்கிளையார்,தலவாக்கலை,ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் பனிமூட்டம் காணப்படுவதால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.