மஹா சிவராத்திரி இன்று(01.03.2022)

நிகழும் பிலவ வருட மாசித் திங்கள் 17ஆம் நாள் செவ்வாய்க் கிழமை (இன்று) மஹா சிவராத்திரி விரத தினமாகும். இத்தினம் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் சோதி வடிவான சிவபெருமானுக்குரிய விரதமாகும். சைவ சமயத்தினருக்கு பெரும் சிறப்பான விரதமாகும். பன்னெடுங்காலமாக நம்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரதமாகும். சைவ மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமுமாகும். சிவத்துடன் சம்பந்தப்படும் இராத்திரி சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது. சிவனுக்குரிய பலகோடி நாமங்களில் தலைசிறந்த நாமம் சிவன் என்பதாகும். சிவன் என்ற சொல்லுக்கு பேரின்பத்துக்குக் காரணன் என்றும் தூயதன்மையன் என்றும் பொருள் காண்பர் ஆன்றோர்கள். ‘சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. அவனோடு ஒப்பார் இங்கு யாரும் மில்லார் என்பது திருமூலர் திருமந்திரமாகும்’. அன்பு தான் சிவம்! சிவம்தான் அன்பு: அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலாதவர்களாவர் என்றும் கூறியுள்ளார்.

தெய்வம் ஒன்று என்றாலும் தெய்வவேதங்கள் பல உள்ளன போன்று விரதங்களும் பலவாயின. சிவ பெருமானுக்குரிய விரதங்கள் எட்டு, அவற்றுள் சிவ ராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு மிகுந்தது. எல்லா விரதங்களையும் விட பல மடங்கு சிறந்தது. விரதத்தின் மகிமை சொல்லி அடங்காது. புற இருளைப் போக்கிக் கொள்வதற்கு சூரிய ஒளி உதவுவது போல அக இருளைப் போக்கிக் கொள்ள நமக்கு உதவுவது சிவ ஒளியாகும். சிவ வழிபாடு செய்வதால் முற்பிறப்பில் செய்த வினைகள் இப்பிறப்பில் அழிந்து விடும். சிவராத்திரி விரதம் மாசிமாதத்தில் வரும் தேய்பிறைக் காலமாகிய அபர பட்சத்தில் பதினான்காம் நாள் இரவு சதுர்த்தசிகூடிய தினத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விரதம் பற்றிய பல வரலாற்று உண்மைகள் உள்ளன. பிரமனும் திருமாலும் நான் பிரமம். நான் பிரமம் என்று தருக்கமிட்டுப் போர் புரிந்தனர். அந்த வேளையில் எம்பெருமான் ஒளிப்பிழம்பாகத் தோன்றினார். இந்த ஒளிப்பிழப்பின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என்னும் அசரீரி ஒலி எழுந்தது. பன்றி உருவெடுத்து திருமால் மண்ணிடைப்புக, அன்னப் பறவை உருவெடுத்து பிரமா விண்ணை நோக்கிப் பறந்தார். அடிமுடி தேடுவதில் இருவரும் முனைப்பாகத் தேடியும் கண்டிலர். தம் ஆற்றாமையை உணர்ந்தனர். இறைவன் அருஉருவத் திருமேனியாகிய இலிங்கோற்பவ வடிவில் காட்சி கொடுத்து அவர்களின் அகந்தையைக் களைந்தார். இதனை அப்பரடிகள் தம் தேவாரத்தில்


செங்கணாளனும் பிரமனும் தம் முளே

எங்கும் தேடித்திரிந்தவர் காண்கிலார்

இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான்

பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே என்றும்,

திருவாசகத்தில் மாணிக்கவாசகரும்

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால் பரமம் யாம் பரமம் யாம் என்றவர்கள் பதைப்பு ஓடுங்க அரனார் அழல் உருவாய் அங்கே அளவு இறந்து பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடோமோ


என்று சோதிவடிவான காட்சியையும் இலிங்கோற்பவத்தையும் காண்பிக்கின்றார்கள். இச்சோதி வடிவான நாளே சிவராத்திரி என்றும் சிவலிங்க வடிவில் காட்சி தந்த நடுஇரவே இலிங்கோற் பவ காலமாகும். விரதம் பற்றிய ஆறுமுகநாவலர் கூறுமிடத்து, மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்ற மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும் என்றார். யான், எனது என்னும் செருக்கின்றி உண்ணாமை உறங்காது நோற்று அகத்தே இறைவனை நினைந்து திருவைந்து எழுத்தினை ஓதி வழிபடின் யான் இங்குற்றேன் யான் இங்குற்றேன் என்று எம்பெருமான் நம்முன்னே தோன்றுவார். இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியவர்கள் ஆசாரசீலர்களாக இருத்தல் வேண்டும். விரத தினத்துக்கு முதல் நாளில் ஒருபோது உணவு உண்டு இரவில் தரையில் நித்திரை செய்து விடியற்காலையில் எழுந்து நீராடிச் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று உணவையும் நித்திரையையும் முற்றாக ஒழித்தல் வேண்டும். இரவு நான்கு சாம காலங்களிலும் சிவபூசை செய்ய வேண்டும். சிவபூசை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் சிவன் கோயில்களில் நடைபெறும் பூசைகளில் கலந்து தரிசிக்க வேண்டும்.

உலகத்தில் சிறந்த செல்வம் படைத்தவர் சிலரும் வறுமையில் உழன்று வருந்துகின்றவர்கள் பலருமாக இருப்பதற்கு காரணம் இறைவனை நினைத்து நல்ல விரதங்களை நோற்பவர் சிலராவர். நோற்காதவர் பலராவர். முற்பிறப்பில் நல்ல விரதமிருந்து இறைவனை வழிபட்டவர்கள் இந்தப் பிறப்பில் சகல செல்வயோகம் மிக்க பெரும் வாழ்வில் வாழ்கின்றார்கள். அல்லாதவர்கள் நல்குரவில் அகப்பட்டு அல்லற்படுகின்றார்கள். இதனை தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர் பலர் நோலாதவர் (குறள் 270)

என்று இரத்தினச் சுருக்கமாக விரதத்தின் சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளார். எனவே சைவ மக்களாகிய நாம் அனைவரும் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து நல்லருள் பெறுவோமாக.

Spread the love