டுவிட்டர் நிறுவனத்தின் மொத்தப்பங்குகளையும் வாங்கிக்கொள்வதாக, எலோன் மஸ்க் அறிவித்ததை, பங்குதாரர்களின் நெருக்குதலையடுத்து டுவிட்டர் நிறுவனம் பரிசீலித்து வருகின்றது. டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு 54 டொலர் 20 சென்ட் எனும் விலையில் நூறு சதவீதமான பங்குகளையும் 4,340 கோடி டொலருக்கு கொள்வனவு செய்வதாக, ஏப்ரல் 14ஆம் நாள் எலோன் மஸ்க் அறிவித்தார்.
இந்தத் தொகையானது, இந்திய மதிப்பில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 873 கோடி ரூபாவாகும். சந்தை மதிப்பை விடவும், 15 சதவீதம் அதிக விலைக்கு வாங்குவதற்கு எலோன் மஸ்க் முன்வந்த போதிலும், அதனை ஏற்பதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் சபை மறுத்துவிட்டது. இந்த நிலையில் எலோன் மஸ்க், கடந்த வெள்ளியன்று டுவிட்டர் பங்குதாரர்களைத் தனியாகச்சந்தித்து பேசினார். பங்குதாரர்களின் நெருக்குதலினால், டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் சபை மற்றும் எலோன் மஸ்க் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, வோல்ஸ் ஸ்ட்ரீட் ஜேர்னல் இணையத்தளம் தெரிவித்தது. நிதி திரட்டுவது குறித்து எலன் மஸ்க் அறிவித்த பின்னர், டுவிட்டர் பங்குதாரர்கள் பலரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, சிறந்த இலாபத்திற்கு விற்கும் ஒரு வாய்ப்பினைத் தவறவிடக்கூடாதென தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.