2009ஆம் ஆண்டு மின்சக்தி சட்டத்திற்கு அமைய கோரப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்தின் ஏனைய விடயங்கள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானமானது தமது ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் என அவர் மேலும் கூறியுள்ளார். மின் கட்டணத்தை 65 முதல் 70 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்தது. இந்த தீர்மானம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமெனவும் அமைச்சரவை குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், இவ்வாறு மின் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதியை வழங்க முடியாதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், மின்சார சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பான கணக்கீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.