இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கலந்துரையாடியுள்ளார். மேலும் இந்திய பிரதமர் மோடியுடனும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சர்ச்சைக்குரிய மீனவர்கள் பிரச்சினை, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருவரும் பேசினர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது என சந்திப்பைத் தொடர்ந்து ஜெய்சங்கர் டுவீட் செய்துள்ளார். இதேவேளை, மற்றொரு டுவீட்டில், இரு நாடுகளின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆம் ஆண்டு நிறைவை இரு நாடுகளும் இணைந்து பொருத்தமான வழிமுறையில் கொண்டாடுவோம் எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே தனது இந்திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டமிட்டுள்ளார்.