இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருக்கிணைப்பாளர் சீமான் என்பவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை, பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல், திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த மஹிந்த இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது.
ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2009 ஈழப்போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபக்ஷ சகோதரர்கள். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அத்தகைய போர்க் குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து, இனப்படுகொலையாளிகளான ராஜபக்ச சகோதரர் உட்பட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் ஓட ஓட விரட்டப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகள் உட்பட உடமைகள் தீயிட்டு கொளுத்தப்படும் காட்சிகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.
சிங்கள இனவாதமும், பௌத்த மதவாதமும் இணைந்து தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையை தகர்த்து, அதற்காக போராடிய மக்களை இனப்படுகொலை செய்து அழித்தொழித்தது. மக்களின் நலனின் அக்கறை செலுத்தாமல், மத, இன வெறியை மக்களுக்கு ஊட்டி, தமிழர்கள் மீதான வன்மததை வளர்த்து, அதன் மூலம் மாறி மாறி அரசாண்ட சிங்கள கொடுங்கோன்மை ஆட்சியாளர்களே இன்று இலங்கையில் நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் மூல காரணம். அதற்கு துணைப் போன சிங்கள மக்கள் ஜம்பதாண்டுகள் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை, பொருளதார நெருக்கடிகளை இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர் என சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.