வடகடல் நிறுவனம் எந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதோ அதனை அடையக்கூடியதாக இருக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (18) திறந்து வைக்கப்பட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் புதிய அலுவலகம் கடற்றொழில் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இரு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவர்களிடம் தேவையான மூலப்பொருட்களை கடனாக வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க. அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் கடனுதவிகள் ஊடாக 160 மில்லியன் ரூபா கடனாக கேட்டிருக்கிறோம். உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றும், அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.