வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆளுநர் தலைமையில் யாழில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆங்கில மொழியில் கூட்டம் நடைபெற்றமையால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்டத்திலிருந்து சிறீதரன் எம்.பி வெளியேறினார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்றுக் காலை யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இக் கூட்டத்தொடரில் இருந்து சிறீதரன் எம்.பி வெளியேறி இருந்தார்
இது தொடர்பாக சிறீதரன் எம்.பி தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையினுடைய கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்த பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு நான் போயிருந்த போதும் ஆங்கில மொழியிலும் சிங்கள மொழியிலுமேயே அந்த கூட்டத்திற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. “எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டும்” என்று நான் கேட்டபொழுது செய்கின்றோம் பார்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் ஒரு மணி நேரம் அங்கே இருந்த போதும் எந்தவிதமான மொழி மாற்றத்திற்கான ஆயத்தங்களும் நடைபெறவில்லை. இதனால் இந்த விடயங்களை என்னால் கிரகித்து பதில் சொல்ல முடியாது என்று சொன்னேன். எத்தனையோ ஆயிரம் பேர் இந்த மண்ணில் இறந்ததற்கு அடிப்படை மொழிரீதியான பிரச்சினையே ஆகும். இதனாலேயே மாகாண சபை முறைமை தோன்றியது. நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வட மாகாண சபையிலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை. ஆகவே நான் இந்த கூட்டத்தில் இருப்பதில் பிரயோசனமில்லை என்று கருதுகிறேன் எனக் கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினேன் என்றார்.