வடக்கில் 1000 ஏக்கரில் சபாரி சரணாலயம் -நிலத்தை தேடுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்பு

வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சபாரி சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை தேடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாய, வன விலங்கு மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்சமயம், வடமாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் விலங்குகளைப் பற்றி அறியவும் பொழுதுபோக்குக்காகவும் தனியான சபாரி சரணாலயம் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் தென்னிலங்கையில் அமைந்துள்ளதால் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தெற்கில் உள்ள மிருகக்காட்சிசாலைகளைப் பார்வையிட வரவேண்டும்.

இதன் காரணமாக, வடமாகாணத்தில் சபாரி சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை(1000 ஏக்கர்) தேடுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி சந்திர ஹேரத் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் வனவள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் புதிய சபாரி சரணாலயம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.தேசிய மிருகக்காட்சிசாலைகளில் உள்ள சில வகை விலங்குகள் மற்றும் தற்போது நகர்ப்புறங்களில் பரவி மக்களின் தோட்டங்களுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை இந்த பூங்காவிற்கு அறிமுகப்படுத்துவதற்கானசாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப் பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட காணிகளில் தேவைப்படின் காடுகளை வளர்த்து அதன் பின்னர் வன விலங்குகளை அங்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஹோமாகம பிரதேசத்தில் பரவியுள்ள மான் கூட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், முறையான சுகாதார பரிசோதனையின் பின்னர், வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள சபாரி சரணாலயத்திற்கு விலங்குகளை அனுப்பி வைக்கலாமெனவும் தெரிவித்தார்.

Spread the love