ரொறன்ரோ
டிசெம்பர் 22, 2021
ஊடக அறிக்கை
தமிழ்நாட்டு மீனவர்களை வைத்து ஆளும் கட்சி உட்பட எல்லாக் கட்சியினரும் அரசியல் செய்கின்றன. இவர்கள் எதற்காக – என்ன காரணத்துக்காக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள் என்பதைக் கட்சிகள் சொல்ல மறுக்கின்றன. இழுவை படகுகளில் இலங்கைக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட இருமடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள்.
இவர்கள் குஞ்சு மீன், நண்டு, இறால் போன்றவற்றைத் வழித்துத் துடைத்தெடுத்துக் கொண்டு போகிறார்கள். இதனால் வட இலங்கை தமிழ் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது கடல் வளங்கள் அழிக்கப்படுவதோடு அவர்களது வலைகளை இழுவைப் படகுகள் அறுத்து எறிந்து விடுகின்றன.
இந்த இழுவைப் படகுகளால் சின்ன வள்ளங்களில் சென்று மீன்பிடிக்கும் ஆயிரக்கணக்கான வட இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட வட இலங்கைத் தமிழ் மீனவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இழுவைப் படகுகளில் வந்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தங்கள் கடலில் மீன் பிடிப்பதைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசைக் கேட்கிறார்கள்.
இலங்கைக் கடல் எல்லையை தாண்டுகிறோம் என்பதைத் தெரிந்தே தமிழக மீனவர்கள் வட இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்திய, தமிழக அரசுகள் இந்த மீனவர்களுக்கு இலங்கைக் கடல் எல்லையை மீற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. அதனைச் சட்டை செய்யாமல் கடல் எல்லையை மீறி மீன் பிடிக்கிறார்கள். கேட்டால் தங்கள் பக்கத்தில் மீன்வளம் அழிந்து விட்டது என்கிறார்கள்.
அவர்கள் பக்கத்தில் மீன்வளம் அழிந்ததற்குக் காரணம் இழுவைப் படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதே. இப்போது வட இலங்கைக் கடற்பரப்பில் அதே பாணியில் மீன் பிடிப்பதால் வட இலங்கைக் கடற்பரப்பில் உள்ள மீன்வளம் விரைவில் அழிந்து போகக் கூடிய அபாயம் இருக்கிறது.
அத்து மீறி வட இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகளில் நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடும்போது இலங்கைக் கடற்படை அவர்களை கைது செய்கிறது. உடனே அவர்களை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம், தொடர் போராட்டத்தில் குதிக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தமிழக மீனவர்களின் கைதுகளைக் கண்டித்து காரசாரமாக அறிக்கை விடுகிறார்கள். சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவராலயத்தை முற்றுகை இடுகிறார்கள்.
மே17 இயக்கம், விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு பழ.நெடுமாறன் போன்றோர் கண்டன அறிக்கைகளை விடுகிறார்கள். பழ. நெடுமாறன் மேலும் ஒருபடி சென்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இராசபக்ச அரசு நாடகம் நடத்துகின்றது எனக் குற்றம் சாட்டுகிறார். இது அடிப்படை எதுவும் இல்லாத குற்றச்சாட்டு. இது நாடகமல்ல. வட இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றிய சிக்கல். அதனை ஏன் தமிழக தலைவர்கள் கண்டுகொள்வதில்லை? அதையிட்டு ஏன் கவலைப்படுவதில்லை? தமிழ்நாடுத் தமிழ் மீனவர்கள் வாழ்ந்தால் போதுமா? வட இலங்கைக் கடலுக்குச் சொந்தக்காரர்களான இலங்கைத் தமிழ் மீனவர்கள் வாழ வேண்டாமா?
தமிழக மீனவர்களை வைத்து அரசியல் செய்யாமல் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதைத் தடுக்க இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்தக் கைதுகள் தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்! தமிழ்நாடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்படிப்பதற்குரிய பயிற்சி, படகுகள், வலைகள் மற்றும் நிதி உதவிகளை ஒன்றிய, மாநில அரசுகள் செய்ய வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இதுவே தீர்வாகும்.