ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இன்றும்(14) தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று(14) மாலை 4.00 மணி முதல் கொழும்பு தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் சேவையில் ஈடுபட மாட்டார்கள் என அதன் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று(13) ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று(14) விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று(14) காலை 8.00 முதல் ஊவா, சபரகமுவ, வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர சிகிச்சை சேவை மற்றும் முக்கிய சிகிச்சை மையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படாது என அதன் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(13) ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(14) முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புதிய வரி கொள்கைக்கு எதிராக இன்று(14) 04 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.