ஹிட்லர் ஜேர்மனியில் ஆட்சி செய்த இறுதி காலத்தில் மக்கள் என்ன துன்பப்பட்டாலும், இறந்தாலும் தனது மனதிலுள்ளதனை செய்து கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டார். இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ஷவும் அவ்வாறே செயற்படுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய தனது பாராளுமன்ற உரையில் ஜனாதிபதி தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹிட்லரும் ஆட்சிக்கு வரும் போது ஜேர்மனியை புது உலகிற்கு கொண்டு செல்வதாக கூறிக்கொண்டு வந்தார். இங்கேயும் ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்ப போவதாகவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறிக்கொண்டே வந்தார். ஆனால் தற்போது தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளிலிருந்து விடுதலை செய்யும் வேலைகளையே செய்து வருகிறார்.
செய்திகளை பார்த்தால் ஒவ்வொரு நாளும் விடுதலை தொடர்பான செய்திகளே வெளிவருகின்றன. தனக்கு தேவையானவர்களை விடுதலை செய்யவும், வெளிநாட்டிலுள்ள தனக்கு தேவையானவர்களது பணத்தை நாட்டுக்கு கொண்டுவரவுமே பதவிக்கு வந்துள்ளார் என தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஒரு யுத்தம் நடைபெறுகிறது. அதுதான் பொருளாதார யுத்தம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சர்கள் அனைவருமே இந்த பொருளாதார யுத்தத்தில் தோல்வியடைந்துள்ளனர்.
ஹிட்லர் தான் போரில் தோல்வியடைகிறேன் என தெரிந்தும் போரில் ஈடுபட்டு மக்களை கொண்டது போல, இங்கேயும் தோல்வியினை தெரிந்தும், மேலும் பொருளாதார வீழ்ச்சியினை கட்டியெழுப்பாமல் மீண்டும், மீண்டும் மக்களை கஷ்டத்தில் தள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை ஜனாதிபதி உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் முன்வைப்பதாக பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.
கொரோனா காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உயிரிழக்கும் நிலையினை உருவாக்க வேண்டாமென கேட்டுக்கொள்ளவதாகவும் மேலும் தெரிவித்தார்.