அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசேட நீதிமன்றத்தில் 13 வருடங்களுக்கும் மேலாக விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்து 77 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஏனைய 28 பேரும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இன்மையினால் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் சுமார் 13 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பயங்கரவாத தாக்குதலானது வைத்தியசாலைகளை இலக்குவைத்து நடத்தப்பட்டதுடன், இந்தியாவில் இவ்வாறு நடத்தப்பட்ட முதலாவது குண்டுத்தாக்குதலாகவும் வரலாற்றில் பதிவானது. தாக்குதல் தொடர்பில் அகமதாபாத் மற்றும் சூரத்தில் 35 வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அகமதாபாத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் 20 வழக்குகளும் சூரத்தில் 15 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
நகரின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் 29 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு இந்தியன் முஜாஹிதின் அமைப்பு பொறுப்பேற்றது. குறித்த அமைப்பானது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் 1100 பேரிடம் சாட்சி விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், இவர்களில் 26 பேரின் அடையாளங்களை நீதிமன்றம் வௌிப்படுத்தியிருக்கவில்லை. அத்துடன், மேலும் நால்வர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.