இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார்.
அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும், 9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது.
அணு மின் நிலையத்தை நிலப்பரப்பில் அமைப்பதா அல்லது கப்பலில் பொருத்தி கடற்பரப்பில் செயற்படுத்துவதா என்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, ரஷ்யாவை சேர்ந்த ஒரு குழுவினரூடாக மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கும், சுமார் மூன்று வருடங்களுக்குள் இலங்கையில் ஒரு குழுவினருக்கு அதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Rosatom State Nuclear Energy நிறுவனம் இதற்கான திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளது.100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று சிறிய கடல் அணு மின் நிலையங்களை தேர்ந்தெடுக்கும் சாத்தியம் இலங்கைக்கு உள்ளதாக S.R.D. ரோஸா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான முதலீடுகள், சலுகைக் காலம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வதற்காக பங்களாதேஷுடன் ரஷ்யா செய்துள்ள ஒப்பந்தத்தை இலங்கை தற்போது ஆய்வு செய்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.