தற்போதைய நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்களைக் கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த வேண்டும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டீ.எஸ்.ருவன்சந்திர அரச நிர்வாக அமைச்சின் செயலாளரைக் கோரியுள்ளார்.
2022ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது அரசபொதுச் செலவினங்களைக் குறைப்பதற்காக அரச பொதுச் சேவை ஊழியர்களைப் பணிக்கு அழைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடியதன் அடிப்படையில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் விநியோகம், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் என்பவற்றில் தடைகள் காணப்படுவதால், அரச செலவினங்களைக் குறைக்கவேண்டிய அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அரசாங்க உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதைக் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் கடமைக்கு அழைக்கவேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்து கடமையாற்ற முடியுமான அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அதற்கு அனுமதி வழங்குவது பொருத்தமானது எனவும் அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அலுவலக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்கவேண்டும் என்றும், சேவைக்கு அழைக்கும்போது நிறுவன அல்லது திணைக்களத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் கோரப்படுகின்றது என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் இருந்து பணிக்குவரும் அலுவலர்களை அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள பணியிடத்தில் தற்காலிகமான இணைப்புச் செய்வதற்கான அதிகாரத்தைத் திணைக்கள அல்லது நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்குவது பொருத்தமானது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.