அனைத்து இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்குமாறு, இலங்கை அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படைகளையும் வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜோன்சன் ஆகியோர் இணைந்து தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இலங்கை மக்களின் ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாஷைகளுக்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போரின் சுமையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன மோதலின் போது உயிரிழந்த அல்லது காணாமல் போன 100,000 இலங்கையர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறி வருகிறது எனவும் தீர்மானம் குறிப்பிடுகிறது. போர்க் குற்றங்களுக்கு பொறுப்பு கூற தயங்கும் அதேவேளை, இலங்கை மக்களின் அரசியல் உரிமைகள் அல்லது பரந்த பொருளாதார நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் அரசால் முடியாதுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணைக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஐ.நா. தீர்மானத்தில் இருந்தும் இலங்கை விலகிவிட்டது.
ராஜபக்ச நிர்வாகத்தின் அடக்குமுறைக் கொள்கைகளைத் தொடர்ந்து, நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. அதன் கடன்களை செலுத்தத் தவறியது. இது பரவலான மக்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. போராட்டத்தை பலத்தைக் கொண்டு அரசு அடக்க முயன்றது. மக்கள் போராட்டம் வலுவடைந்ததை தொடர்ந்து 2022 ஜூலையில் ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்தார். தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரணில் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராகவும், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் ஏவப்பட்டு ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன எனவும் தீர்மானம் குறிப்பிடுகிறது.
போர், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அடக்குமுறை ஆகியவற்றால் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மக்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என தீர்மானத்தை முன்வைத்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதுடன், சமாதானம், ஜனநாயகம், செழிப்பான வாழ்க்கைக்கு இலங்கை மக்களுக்கான ஆதரவை எனது தீர்மானம் வெளிப்படுத்துகிறது. மேலும், முந்தைய ஆட்சிகள் வேண்டுமென்றே குறிவைத்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்கள் அனைத்து மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை நாட்டின் அரசாங்கம் அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்பதையும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளோம் எனவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, இந்தத் தீர்மானத்தை முன்வைத்த காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜோன்சன் ஆகியோரை நாங்கள் பாராட்டுகிறோம். இது மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை அங்கீகரிப்பதில் ஒரு முக்கியமான படியாகும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு (PEARL) தெரிவித்துள்ளது. தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள படி, இந்த இக்கட்டான தருணத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாட்டின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகால நீதிக்கான கோரிக்கைகள் தீர்க்கப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட்டு, வட,கிழக்கில் ஆக்கிர மிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு அமெரிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.