நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிபுணர் சங்க கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். இதேவேளை, வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கையில் புலம்பெயர் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
“இப்போது நாங்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காலகட்டத்தை கடந்து வருகிறோம். நாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகிறோம். நிலைமை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. நான் அவசரகால நிலையை மீண்டும் நீட்டிக்க மாட்டேன். அவசரகால நிலை இந்த வார முடிவுக்குள் நிறைவடைய உள்ளதாக நினைகிறேன். ஆனால் அது மட்டும் போதாது. நம்முடைய மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இருக்கும். இல்லையென்றால் இன்னொரு லெபனானாக மாறுவோம். நான் நிதியமைச்சரானவுடன் ஒன்றை உணர்ந்தேன். அன்னியச் செலாவணியைப் பொறுத்தவரை நான் இலங்கைக் குடியரசை விட பணக்காரன். என் வீட்டில் ஆயிரம் டொலர்கள் சேமித்து வைத்திருக்கிறேன், அதனால் நான் குடியரசை விட ஆயிரம் மடங்கு பணக்காரன். எனவே நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
பணியாளர் ஒப்பந்தத்திற்கான இறுதி விதிமுறைகளில் இப்போது இரண்டு குழுக்கள் வேலை செய்கின்றன. கடன் தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ள மேற்குலக மற்றும் சீனா, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் நிதி உதவி வழங்க தயாராக உள்ளன. இந்த இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து ஜப்பானுடன் ஆலோசித்து வருகிறோம். நாம் விரைவாக செயல்பட்டால், இது குறுகிய கால வலியாக இருக்கும். ஆனால் வாதங்கள் தொடர்ந்தால், அனைவரும் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். நாம் பழைய முறையை கொண்டு வர மீண்டும் அதே பழைய அரசியலில் ஈடுபடுகிறோமா? அதுதான் பிரச்சனை? சரி முதலில் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவோம். நீங்களும் ஆதரிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். பின்னர் பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்ற முயற்சிப்போம்.