தற்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பறவைக் காய்ச்சல் உள்ளதால், அந்த நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதியை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என்றார். தேவைப்பட்டால் பறவைக் காய்ச்சல் இல்லாத அமெரிக்கா, பிரேஸில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கன்னொறுவையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது ஒரு முட்டை 50 ரூபாவுக்கும் குறைவான விலையில் நுகர்வோரின் கைகளில் கிடைக்கும் என்றும் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மக்காச்சோள அறுவடை சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் முட்டை உற்பத்திப் பொருட்களின் விலை மேலும் குறையும் என்றும் அவர் கூறினார்.