அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கு எதிராக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கும் கிம் யோ ஜாங், “அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் கைப்பாவை தென் கொரிய இராணுவத்தின் அமைதியற்ற இராணுவ நகர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
இதற்காக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து, அவருடைய சகோதரி கிம் யோ ஜாங், சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அவர், அந்நாட்டின் அதிகாரமிக்க வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
கிம் ஜாங் உன், அதிபரான காலம் தொட்டே அவருடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கும் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பொறுப்பு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஆண்டு “நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது” என்று ஜோ பைடன் அரசுக்கு கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.