அமெரிக்க ஜனாதிபதி உள்பட 963 பேருக்கு ரஷியாவிற்குள் உள்நுழைய தடை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உறவினர்கள் உள்பட 963 பேர் ரஷியா நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.


உக்ரைன் மீது ரஷிய இராணுவம் மேற்கொண்டுள்ள படையெடுப்பு 3 மாதங்களை எட்டவுள்ளது. உக்ரைனும் பதிலடி கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை அளித்து வருகிறது. கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது.


இதுதவிர, ரஷியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது. போரால் கோதுமை, சோளம் போன்ற உணவு பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.


அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ரஷியாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷியா மீது தொடர்ச்சியாக அமெரிக்க தடைகளை விதித்து வரும் சூழலில் அதற்கு பதில் நடவடிக்கையாக, ரஷிய கூட்டமைப்புக்குள் நுழைவதற்கு நிரந்த தடை விதிக்கப்பட்ட அமெரிக்க குடிமகன்களின் பட்டியலை ரஷிய அரசு வெளியிடுகிறது என தெரிவித்து உள்ளது.


ரஷிய நாடு மற்றும் ரஷியர்களுக்கு எதிராக வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகிற தனிநபர்கள் இந்த பட்டியலில் வருகிறார்கள். இதில், அமெரிக்க பொதுமக்கள் வருவதில்லை. அவர்கள் எப்போதும் எங்களால் மதிக்கப்படுகிறார்கள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.


இதன்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது உறவினர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் உள்பட அமெரிக்க தனிநபர்கள் 963 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது என ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

Spread the love