அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) நேற்று வட பகுதிக்கு விஜயம் செய்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்தார். இச்சந்திப்பின்போது பல வருடங்களாகியும் தங்களின் காணாமலாக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த தகவல்களை எதிர்பார்த்துள்ளதாக ரொபர்ட் கப்ரோத்திடம் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமெரிக்கா உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என ரொபர்ட் கப்ரோத் காணாமலாக்கப்பட்டோர் உறவுகளிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கிளிநொச்சியில் ஹலோ ட்ரஸ்ட் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரையும் ரொபர்ட் கப்ரோத் நேற்று சந்தித்துப் பேசினார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வேலைத் திட்டம் குறித்து கலந்துரையாடுவதே ரொபர்ட் கப்ரோத் இலங்கை விஜயத்தின் நோக்கம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது ரொபர்ட் கப்ரோத், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.