இஸ்ரேலும் லெபனானும் தனது மத்தியதரைக் கடல் எல்லைகளை நிர்ணயிக்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இஸ்ரேல் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தொடக்கம் இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமிடையில் போர் சூழலில் இருந்து வந்தது. எரிவாயு தளம் ஒன்றின் உரிமைக்காக இரு நாடுகளும் பிரச்சினைப்பட்டுவந்தன.
இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொள்ள முதல் எரிவாயு எடுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத மற்றும் அரசியல் குழுவான ஹிஸ்புல்லா எச்சரித்து வந்தது. இந்த உடன்படிக்கையால் எரிவாயு தளத்தில் இருந்து இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் பலன் பெறவுள்ளன. இந்த உடன்படிக்கையில் 330 சதுர மைல் கடல் பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
எல்லைகள் பிரிப்பதில் இருந்த முரண்பாடு காரணமாக இந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்களை இரு நாடுகளும் பெற முடியுமாக ஒப்பந்தம் அமைந்துள்ளது. எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்ட கரிஷ் பகுதியை இஸ்ரேலுக்கும் குவானா பகுதியை லெபனானுக்கும் வழங்க அமெரிக்காவின் மத்தியஸ்தத்திலான உடன்படிக்கையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.