01. உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் (UNESCO – ICHEI) மற்றும் இலங்கை அரசின் கல்வி அமைச்சுக்கும் இடையில் கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் எமது நாட்டின் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பணியாளர்களின் இயலளவை அதிகரிப்பதற்காக இணையவழி ஊடாக பயிற்சிகளை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதன் கீழ் செயற்கையான நுண்ணறிவு (Artificial Intelligence), றொபோ தொழிநுட்பம், தரவுப் பகுப்பாய்வு, இயந்திராதிகள், பொறியியல் கற்கைகள், டிஜிட்டல் வடிவமைப்பு, மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற துறைகளை அணுகுவதற்கான தளங்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. செலவு வரம்பின் அடிப்படையில் நீர்க் கட்டணத்தை அறிமுகப்படுத்தல்
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நிலைபேற்றை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாகவும் தடையின்றியும் நீர் வழங்கலை மேற்கொள்வதற்கு கட்டணங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மூலதனக் கடன் பொறுப்புக்களை ஈடு செய்வதற்கு இயலுமான வகையில் தற்போது அறவிடப்படும் நீர்க் கட்டணம் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03.உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பிராந்தியக் கைத்தொழில் பேட்டை
தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான காணிகளை ஒதுக்கி வழங்கல், பிராந்திய மட்டத்தில் கைத்தொழிற்றுறையை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் மூலம் ‘பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 25 முதலீட்டாளர்களுக்கு 13 கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழித் தேர்ச்சி வழங்கலை ஆரம்பித்தல்
இலங்கை அரசு மற்றும் ஜப்பான் அரசுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தொழிநுட்ப சேவைக்காலப் பயிலுநர்களாக, விசேட நிபுணத்துவங்களுடன் கூடிய வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 14 துறைகளில் தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்காக இலங்கையர்களுக்கு இயலுமை உண்டு. அதற்காக, ஜப்பான் மொழித் தேர்ச்சி கட்டாயமான தகைமையாக இருப்பதுடன், பல கட்டங்களாக நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் குறித்த தகைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்துவரும் 05 ஆண்டுகளில் விசேட நிபுணத்துவ வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 345,000 தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உள்ளிட்ட 07 நாடுகளுடன் ஜப்பான் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் தொழிநுட்பவியல் பாடவிதானத்தின் கீழ் ஜப்பான் மொழி மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், ஜப்பான் வேலைவாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட பராமரிப்புச் சேவைகள், விருந்தோம்பல் சேவைகள், கட்டிடங்கள் தூய்மையாக்கல், விவசாய நடவடிக்கைகள், மோட்டார் வாகன தொழிநுட்பவியல் அல்லது மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பத் துறைகளில் மென் திறன்களை விருத்தி செய்வதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கான விமான சேவைகள் காப்புறுதிக் காப்பீட்டுக்கான ஒப்பந்தம் வழங்கல்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி தனது விமானங்களுக்கு 04 வகையான காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் காப்புறுதிச் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றது. குறித்த 04 காப்புறுதிக் காப்பீடுகளுக்காக காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள பொதுக் காப்புறுதிக் கம்பனிகளிடமிருந்து மட்டுப்பட்டுத்தப்பட்ட தேசியப் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழவின் பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த ஒப்பந்தத்தை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீடு
வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களின் அடுத்த கட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் iசுழுயுனு 1 மற்றும் iசுழுயுனு 2 கருத்திட்டங்களின் கீழ் 6,250 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 750 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் அபிவிருத்தி செய்து, பராமரிப்பதற்காக 140 சிவில் வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 4,800 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 300 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டங்களை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் கருத்திட்டத்தின் 5 ஆம் கட்டத்திற்காக 243 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் கருத்திட்டத்தின் 4 ஆம் கட்டத்திற்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07 வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச்சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், கலால் வரி (52 ஆம் அத்தியாயம்) இன் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் உள்ளடங்கிய 02 வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தல் செய்தல்
சுவட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் இலத்திரனியல் வலுவைப் பயன்படுத்தி இயங்குகின்ற வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இலத்திரனியல் மோட்டார் முச்சக்கர ஊர்திகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் காணப்படாமையால், குறித்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளை பதிவு செய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்தல்
அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளல் (Knowledge Process Outsourcing) வியாபாரச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல் (Business Process Outsourcing) வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அலுவலகங்கள் (Back office) மற்றும் தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட (ICT enabling services) வியாபார நிறுவனங்களின் இயல்புகளுக்கமைய குறித்த தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வேறு நாடுகளின் நேர அட்டவணைக்கமைய பணிபுரிவதற்கு நேரிடுகின்றது.
ஆனாலும், 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை மட்டுப்படுத்தப்பட்ட தொழில்களில் மாத்திரமே பணியில் அமர்த்தலாம். குறித்த நிலைமையின் கீழ் பெண்களை இரவு வேளைகளில் தொழிலில் அமர்த்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. அமைச்சரவை உப செயற்குழுக்களை நியமித்தல்
அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சட்டரீதியான மற்றும் ஏனைய ஏற்புடைய விடயங்களை ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய விடயதானங்களுக்கு அமைவாக சமர்;ப்பிக்கப்படும் அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் அமைச்சரவை உப செயற்குழுக்களை நிறுவுதல் பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் பெறுகைக் கோரல் நடவடிக்கைகள் போன்ற அரச செலவுகள் தொடர்பான யோசனைகள் பற்றி கொள்கை ரீதியான பரிந்துரைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரச செலவுகள் முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவொன்றை நியமிப்பதற்காகவும், அரச சேவை நியமனங்கள், பதவியுயர்வு, இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற நிறுவன ரீதியான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் பற்றி சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு கொள்கை ரீதியான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் நிறுவன ரீதியான விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவை நியமிப்பதற்காவும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபசெயற்குழுவை நியமித்தல் மற்றும் உணவுப்பாதுகாப்புக் குழுவை அமைத்தல்
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தி வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்கு அவசியமான கொள்கை ரீதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வாழ்க்கைச் செலவு தொடர்பான உபசெயற்குழுவை நியமிப்பதற்கும், குறித்த உபசெயற்குழு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதற்காக சந்தை, வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையின் கீழ் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
வறுமைப்பட்டவர்கள் மற்றும் இடர்களுக்கு உள்ளாகியவர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டம்’ எனும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்படப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் சிலவற்றில் காணப்படும் மேலதிக நிதியை மீளாய்வின் மூலம் ஒதுக்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், கருத்திட்ட செயற்பாடுகளின் நிதியிடலுக்காக சுபீட்சமான மற்றும் ஆசிய பசுபிக் வலய துரிதமீட்சிக்கான ஜப்பான் நிதியத்தால் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், அதற்கமைய ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல்
தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவு வரம்பின் அடிப்படையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 05 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்
சமகாலத்தில் நாட்டில் நிலவுகின்ற மோசமான வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால், தொடர்ச்சியாக பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் போட்டித்தன்மையான தரப்பினர்களுக்கு அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம்த்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.