அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2022.08.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும்  குறைந்தபட்ச தரநியமங்களை அறிமுகப்படுத்தல்

இலங்கையில் வாழ்கின்ற அநாதை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உடல் மற்றும் உள ரீதியான நல்விருத்தி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்திச் சேவைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் மற்றும் முதன்மைச் சட்டங்கள் மாகாண மட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டியொன்று இல்லை. அதனால், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துறைசார்ந்த அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நிபுணர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த ‘இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தபட்ச தரநியமங்கள்’ இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

02. 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

• கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள்

ஜனாதிபதி

பாதுகாப்பு மற்று நிதி உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர்

• கௌரவ தினேஷ் குணவர்த்தன

பிரதமர்

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

• கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கடற்றொழில் அமைச்சர்

• கௌரவ சுசில் பிரேமஜயந்த

கல்வி அமைச்சர்

• கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர்

• கௌரவ அலி சப்ரி 

வெளிவிவகார அமைச்சர்

• கௌரவ விதுர விக்கிரமநாயக்க

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர்

• கௌரவ கஞ்சன விஜேசேகர 

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

• கௌரவ டிரான் அலஸ்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

03.  விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களுக்காக  இலங்கை அரசு மற்றும் நேபாள அரசுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளல்

இலங்கை அரசு மற்றும் நேபாள அரசுக்கிடையில் விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களுக்கு புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக முன்பிருந்த திறன் விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய உற்பத்திகள் இராஜாங்க அமைச்சுக்கு 2021.06.21 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை இதுவரை கையொப்பமிடவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகளுக்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

04. நாவலப்பிட்டி அல் – சஃபா ஆரம்பப் பாடசாலைக்கு இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியொன்றை ஒதுக்கி வழங்கல்

1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் மீள்கட்டமைத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டி அல் – சஃபா ஆரம்பப் பாடசாலை 2013 ஆம் ஆண்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான கட்டிட வசதிகள் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான நாலப்பிட்டி புகையிரத நிலையத்திற்குரிய பண்டங்கள் களஞ்சியத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பாடசாலையின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் குறித்த கட்டிடம் போதுமானதாக இன்மையால், நிரந்தரமான கட்டிடமொன்றை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைப் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலப்பிட்டி கொடமுதுன கரஹந்துன்கலவில் அமைந்துள்ள 02 ஏக்கர்களைக் கொண்ட காணித்துண்டை பாடசாலைக்காக சட்டபூர்வமாக ஒதுக்கி வழங்குவதற்காக கல்வி அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்களால் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

05. இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்காக இலங்கை மற்றும் இந்திய அஞ்சல் அதிகாரிகளால் கூட்டாக முத்திரை வெளியிடல்

2022 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்கு இணையாக ‘ஜனநாயகம்’ எனும் தொனிப்பொருளில் இரண்டு நாடுகளின் ‘பாராளுமன்றங்களை’ பிரதிபலிக்கின்ற வகையில் எமது நாட்டின் அஞ்சல் திணைக்களம் மற்றும் இந்திய அஞ்சல் திணைக்களத்தால் இரண்டு கொண்டாட்ட முத்திரைகள் வீதம் வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு நாடுகளாலும் வெளியிடப்படும் முத்திரைகளில் 3,000 முத்திரைப்  பொதிகளும், 5,000 நினைவுப் பத்திரங்களும், 2,000 முதல் நாள் அட்டைகளையும் பரிமாற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக இரண்டு நாடுகளின் அஞ்சல் திணைக்களங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

06. இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தை தாபிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரித்தல்

ஊடகத் துறையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை அதிகரிக்கும் நோக்கில் ‘இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்களின் நிறுவனம்’ இனைத் தாபிப்பதற்காக 2021.10.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடாத்தல் குழுவால் குறித்த நிறுவனத்தைத் தாபிப்பதற்கு ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கும், இதற்கு முன்னர் முன்மொழியப்பட்டுள்ள ‘இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்  நிறுவனம்’ எனும் பெயருக்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் ‘இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனம்’ எனத் திருத்தம் செய்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

07. இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுதல்

இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்காக 2013.08.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Spread the love