அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று ஆகஸ்ட் 9 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தவுள்ளன. கொழும்பு விகாரமாதேவி பூங்காவை அண்மித்த பகுதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

ஜுலை 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் வெற்றியின் பின்னர், இன்றைய தினத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இன்று போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட் டுள்ளன. இதன்படி தேசிய எதிர்ப்பு தினமாக இன்றைய தினத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் இந்தப் போராட்டங்களுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும், நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன. கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இது தொடர்பில் மனுவை தாக்கல் செய்து இந்தப் போராட்டங்களுக்கு தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரியிருந்தனர். ஆனால் தடையுத்தரவு விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள நீதிவான், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும் போராட்டக்காரர்கள் நடந்துகொண்டால் அதன்போது பொலிஸார் தேவையான அதிகாரங்களை பயன்படுத்த முடியுமென்று அறிவித்துள்ளார்.

இதேவேளை எத்தகைய தடைகளை போட்டாலும் திட்டமிட்டவாறு தமது போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தொழிற்சங்கங்களின் கூட்டணி அறிவித்துள்ளது. இன்றைய தினத்தில் காலி முகத்திடலிலும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ள நிலையிலும் சிலர் தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இவர்களுக்கு ஆதரவான குழுக்கள் அந்தப் பகுதியில் இன்றைய தினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடதிட்டமிட்டுள்ளன. எவ்வாறாயினும் ஜுலை 9 ஆம் திகதி போராட்டத்தின் போது ஆதரவளித்த தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகள் பல இன்றைய போராட்டத்திற்கு ஆதரவளிக்காது விலகியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love