சுவிட்சர்லாந்து – ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமை அலுவலகம் எதிரே அரச அடக்குமுறையை எதிர்த்து அங்குள்ள இலங்கையர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இலங்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தேர்தலை நடத்தி தங்கள் தலைவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை இலங்கையர்களுக்கு வழங்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் ஆணையைப் பெறாத அரசாங்கம் வெளியேற வேண்டும் என ஜெனீவா மனித உரிமைகள்ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பெருமளவான இலங்கையர்கள் குறிப்பாக அதிகளவான சிங்கள மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.