அரசுக்கு எதிராக 120 எம்.பி.க்கள்- பதவி விலக ஒருவார அவகாசம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 120 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி பக்கத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்படி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகுவதற்காக ஒருவார கால அவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் பதவி விலகவேண்டும் என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,  அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது, 113 ஐ அமைக்கும் வரையில் சற்று பொறுத்திருங்கள் என்று நாங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு கூறியிருந்தோம். ஆனால் இப்போது 113 அல்ல 120 ஆக உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சியில் 65 உறுப்பினர்களே இருந்தனர். நாங்கள் 42 பேரும் இணைந்த பின்னர் அவர்களில் மூவர் அமைச்சுப்பதவிகளை எடுத்துக்கொண்டு சென்றனர்.

இந்நிலையில் எமது எஞ்சிய 39 பேரும் 65 பேருடன் இணைந்தால் 104 உறுப்பினர்களாகின்றது. இதனை தொடர்ந்து இடைக்கால அனைத்துக்கட்சிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்காக மொட்டுக்கட்சியை சேர்ந்த 10 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். அதன்படி எமது பக்கத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்வடைந்தது. இதேவேளை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக கூறிய மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் அதற்கான ஆதரவை நீக்கிக்கொண்டு வெளியேறியுள்ளனர். இதற்கமை எமது பக்கத்தில் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்கின்றது. அதேபோன்று நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும மற்றும் சரித ஹேரத் ஆகியோர் இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களையும் இணைத்துக்கொண்டால் எமது பக்கத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை தமது நிலைப்பாட்டை அறிவிக்காது இருக்கும் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த மேலும் பலர் நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவளிக்க உள்ளனர். இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த வாரத்திற்குள் சமர்ப்பிப்போம். இதன்படி பதவி விலகுவதற்காக ஒருவார காலம் அவகாசம் வழங்கப்படுகின்றது. அதற்குள் பதவி விலகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Spread the love