அரச வங்கிகளினால் 2021 மார்ச் 31 வரை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு 541 பில்லியன் ரூபாவும் 2022 மே 31, நிலவரப்படி, மின்சார சபைக்கு 418 பில்லியன் ரூபாவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு. 1.46 டிரில்லியன் ரூபாவும் கடனாக கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கும் மக்களுக்கும் தொடர்ந்தும் சுமையை ஏற்றிவரும் இந்த நிறுவனங்களை நடத்த வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு, நாட்டின் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,
வங்கி மற்றும் நிதி அமைப்பைப் பாதுகாப்பதே எங்களுக்கு மற்றொரு முதன்மையான முன்னுரிமையாகவுள்ளது. எனவே நாங்கள் அரச வங்கிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இரு தரப்பிலும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, மறுபுறம் அரசு நிறுவனங்களுக்கு அவர்கள் கொடுத்த பெரும் தொகை கடன், 2021 மார்ச் 31 வரை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு 541 பில்லியன் ரூபாவும் 2022 மே 31, நிலவரப்படி, மின்சார சபைக்கு 418 பில்லியன் ரூபாவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு. 1.46 டிரில்லியன் ரூபா கடனாக கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் போது. ஒட்டுமொத்த குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர். வாழ்நாளில் இது வரை விமானத்தில் பயணிக்காதவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்பால் தவித்து வருகின்றனர். வாழ்நாள் முழுவதும் எரிபொருளுக்கு பணம் கொடுத்த மக்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்பினால் தவித்து வருகின்றனர். பல மணிநேரம், நாட்கள், நாட்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொண்டு, நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனத்திடம் இழப்பீடு செலுத்துகின்றனர். வாழ்நாள் முழுவதும் பணம் கொடுத்து மின்சாரம் பெறும் மக்கள், தினமும் பல மணி நேரம் இருளில் அமர்ந்து மின்சாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
மக்கள் படும் துன்பங்கள், துன்புறுத்தல்கள், தொல்லைகள் மற்றும் நிறுவனங்களின் இழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை மறைப்பதற்கு நீண்ட காலமாக சாக்குப்போக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்களின் வளங்கள், மக்களின் சொத்துக்கள் என அந்தந்த நிறுவனங்களின் தோல்வியும் இந்த முகமூடியால் மறைக்கப்படுகிறது. இவை உண்மையான மக்களின் சொத்துக்களாகவும், மக்களின் வளங்களாகவும் இருந்தால், மக்களுக்கு நிவாரணம், வசதி, லாபம் ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்களால் மக்கள் துன்பங்கள், தொல்லைகள் மற்றும் இழப்புகளை மரபுரிமையாக பெற்றுள்ளனர்.
எனவே நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக மாறியுள்ள இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். இப்படி முப்பது நாற்பது வருடங்களாக மக்கள் மீது சுமையை ஏற்றுவது நியாயமா? தொடர்ந்து மக்கள் மீது சுமையை ஏற்றிய இந்த நிறுவனங்களை நடத்த வேண்டுமா? இந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை ஏன் மக்களுக்குச் சுமையின்றி வழங்க முடியாது? இந்த சேவைகளை வழங்க வேறு வழிகள் இல்லையா? இந்த அனைத்து உண்மைகளையும் கருத் தில் கொண்டு, இந்த நிறுவனங்களை மறுசீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவை நாட்டுக்கு சுமை ஏற்படாத வகையில் பராமரிக்கப்ப டுவது உறுதி செய்யப்படும் என்றார்.