எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் சந்தையில் அரிசியின் விலை ஓரளவுக்கு அதிகரிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவன பண்ணையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததாகவும், ஆனால் விவசாயிகள் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை விற்பனை செய்யாததால் அரசிடம் கூடுதல் அரிசி அல்லது நெல் இருப்பு இல்லை எனவும் தற்போது நெல் இருப்பு தனியாரிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தனியார் வசம் உள்ள நெல் இருப்பு காரணமாக அரிசியின் விலை உயரும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுத்து நுகர்வோரை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், அறுவடை செய்யப்பட்ட பல வயல்களில் அதிக மகசூல் கிடைத்துள்ளதாகவும் விவசாய திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வறட்சி காரணமாக 100,000 ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்தாலும் எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.