அலரி மாளிகையிலிருந்து வௌியேறிய போராட்டக்காரர்கள்

அலரி மாளிகையிலிருந்து நேற்று (14) மாலை போராட்டக்காரர்கள் வௌியேறினர். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர்கள் இந்த விடயத்தை அறிவித்தனர்.

கடந்த 09 ஆம் திகதி போராட்டக்காரர்களால் அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் குறித்த இடங்களை பார்வையிடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்து, இந்த கட்டடங்களை பார்வையிட்டனர்.

இந்நிலையில், தமது பிடியிலுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்க போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர். இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதனை அறிவித்தனர்.

இதனிடையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்தும் பிரதமர் செயலகத்திற்கு அருகே கூடியுள்ளனர்.

Spread the love